‪#‎தந்தைக்கு‬ நிகர் தந்தையே

‪#‎தந்தைக்கு‬ நிகர் தந்தையே......[தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]
நம் அனைவருக்கும் தாயின் பாசம் தான் தெரியும், நாம் வளர்ந்து நம் வேலைகளை நாமே செய்துக் கொள்கிற வரை நம்மை தாங்கி நிற்பவள் தாய். இந்த காலகட்டங்களில் நமக்கு, பொதுவாக எல்லோருக்குமே தந்தையிடம் பெரிதாக ஈடுபாடு இருக்காது, அம்மா சாப்பாடு ரெடியா? அம்மா என் டிரஸ் ரெடியா? அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் அம்மா எனக்கு பாக்கெட் மணி கொடு, அம்மா அப்பாகிட்டே சொல்லு எனக்கு அது வேணும், இது வேணும் என்று அம்மாவே உலகமாக இருப்போம், அப்பாவிடம் பாசம் இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியிருக்கும் அது வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும் ஒரு கட்டத்தில் தந்தையும் மகனும் பேசிக் கொள்வதே குறைந்து விடும். நம் தந்தையை நாம் புரிந்து கொள்வது எப்போது என்றால் நாம் தந்தையாகும் போது தான், இந்த சூழ்நிலையில் அப்பா எப்படி கஷ்டப் பட்டிருப்பார் என்பதை நாம் நம் வாழ்கையில் அனுபவிக்கும் போது தான் உணர்வோம்.
தந்தையின் தியாகமும் தாய் செய்யும் தியாகத்திற்கு குறைந்ததல்ல, குடும்பத்தில் அமைதியான, அழகான சுமுக நிலை நிலவ வேண்டுமானால் அதற்கு தந்தையின் பங்கு மிக முக்கியமானது. தந்தை ஒரு குடிகாரராகவோ, மற்ற ஏதும் கெட்டப் பழக்கம் உள்ளவராகவோ இருந்தால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மனைவி மக்கள் எல்லாரும் பாதிக்கப்படுவர். வாழ்கைக்கு பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அது இருந்தால் தான் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சுவைக்க முடியும். தந்தை சீரான பொருளாதார வசதி அளித்தால் தான் தாயால் அவள் கடமைகளை சரிவர செய்ய முடியும், குழந்தைக்கு பாலுட்டுவதிலிருந்து பள்ளி கல்லூரிக்கு பணம் கட்டுவது வரை. தந்தையின் பங்கு கட்டிடத்தின் அடியில் இருக்கும் அஸ்திவாரம் போல் வெளியே தெரிவதில்லை.
தாயின் பங்கு வெளிப்படையானது எந்த குழந்தையும் புரிந்து கொள்ளும் தாய் நமக்காக பாடுபடுகிறாள் என்று, ஆனால் தந்தையின் பங்கை புரிந்து கொள்ள நமக்கு வயதும் முதிர்ச்சியும் தேவைப்படுகிறது.
ஒரு தாய் தன் பிள்ளைகளை 10 மாதந்தான் சுமக்கிறாள் ஆனால் தந்தை தன் மனைவி மக்களை இறக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான். தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தன்னை கடினமாக்கிக் கொண்டு கண்டிக்கும் போதே தந்தையின் தியாகம் தொடங்கி விடுகிறது. தன் பிள்ளைக்கு தன் மேல் வெறுப்பு வரும் என்று தெரிந்தும் தன் பிள்ளை வழி தவறி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு நடந்துக் கொள்கிறார்.
ஒருவன் தந்தையாகிவிட்டப் பிறகு தனக்கென்று எதையும் சிந்திப்பதில்லை, இதை பிள்ளைக்கு வாங்கலாம் இதை மனைவிக்கு வாங்கலாம் என்று தனக்கான தேவைகளை முற்றும் குறைத்துக் கொள்கிறான், பொருளாதர வகையில் பாhத்தால் கூலித் தொழிளாலி தந்தை முதல் கோடீஸ்வரத் தந்தை வரை பல விதமான அழுத்தங்களை கஷ்டங்களை பொருளீட்டும் போது சந்திக்க வேண்டி வருகிறது, அனைத்தும் யாருக்கு மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தந்தையர்களின் பிரதான நோக்கமாய் இருக்கும்.
தந்தையைப் பற்றி நாம் உணரும் போது தந்தை நம்முடன் இருக்க மாட்டார், நாம் தந்தையாகும் போது தான் நம் தந்தையைப் பற்றி முழுமையாக உணர்வோம். எங்கோ படித்த ஒரு விசயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், 10 வயது வரை என் தந்தையை விட பலசாலி யாரும் இல்லை, என் தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம் (அதனால் தான் ரயில் எப்படி ஓடுகிறது, விமானம் எப்படி பறக்கிறது என்பது போன்ற கேள்விகள் கேட்கிறோம்) 15 வயசுக்கு பிறகு தந்தை இந்த காலத்துக்கு பொறுந்தாத ஆள் என்று நினைக்கிறோம், 20 வயதுக்கு மேல் என் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம், 30 வயதுக்கு மேல் தந்தையிடம் ஆலோசனைக் கேட்டால் நல்லது என்று நினைக்கிறோம், 40 வயதுக்கு மேல் இந்த பிரச்கனைக்கு தந்தை இருந்திருந்தால் நல்ல தீர்வு சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம் இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் விசயம்.
ஆக தந்தையை நாம் புரிந்துக் கொள்ள வயதும் அனுபவமும் தேவைப் படுகிறது. இன்று நாம் படித்து நல்ல வேவையிலோ, நல்ல தொழிலோ இருப்பதற்கு தந்தை என்ற அந்த ஏணியை பயன் படுத்தித் தான் வந்திருப்போம் (ஏணியை உதைப்பவர் எத்தனையோ பேர்) அதற்கு தான் முன்னோர்கள் சொன்னார்கள் ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று. தந்தைக்கு நிகர் தந்தையே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக