உயிரும் ஆன்மாவும் :

உயிரும் ஆன்மாவும் :

உடம்பு, உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். இந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த அத்தியாயம் ஆராய்கிறது.

இந்த ஆன்மா என்று நாம் யாரைத் தியானிக்கிறோம்? இருவரில் யார் ஆன்மா? யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, பேசுகிறோமோ, இனிப்பு-கசப்பு என்று பகுத்தறிகிறோமோ அவரே ஆன்மா.

உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகின்றன. ஆனால் கதிரவன் எதிலும் நேரடியாக ஈடுபடுவது இல்லை. அவனது முன்னிலையில் அனைத்தும் நடைபெறுகின்றன. அது போல், ஆன்மா ஒரு சாட்சியாக இருக்க, உயிர் உலகின் இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது.

முண்டக உபநிஷதம் ஓர் உவமையின் மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது. ‘ஓர் மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும், புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்பதும் அதன் காரணமாக இன்பதுன்பங்களை மாறிமாறி அனுபவிப்பதுமாக இருக்கிறது. மற்றொரு பறவை எதையும் தின்னாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கிறது. இங்கே, அனுபவிக்கின்ற பறவை ஜீவனையும் மற்ற பறவை ஆன்மாவையும் குறித்து நிற்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் தமது கையில் அடிபட்டபோது கூறினார்; இதனுள் {நம் உடம்பினுள்} இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை ......இன்னொருவர் பக்தனாக ஆகியுள்ளான். பக்தனுக்குதான் கை உடைந்தது . கை உடைவது போன்ற சுகதுக்கங்கள் உயிருக்கே என்பது இங்கே உணர்த்தப்படுகிறது.

பார்ப்பது, கேட்பது போன்ற அனுபவங்கள் உயிருக்கு. ஆனால், பார்ப்பது கேட்பது போன்ற அனுபவங்களுக்கு ஆதாரமாக இருப்பது ஆன்மா. அனைத்திற்கும் சாட்சியாக விளங்குகின்ற அதையே நாம் தியானிக்க வேண்டுமென்று இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

ஆன்மாவே ஆதாரம்:

அந்த ஆன்மாவே புத்தியாகவும், மனமாகவும் ஆகியிருக்கிறது. உணர்வு (PERCEPTION), ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக் கூர்மை, உள்ளுணர்வு (INSIGHT), மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத் தெளிவு, மனக்கலக்கம், நினைவு, நிச்சய புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நாட்டம் என்பவை ஆன்மாவின் பல பெயர்கள் ஆகும்.

பேருணர்வுப் பொருளான ஆன்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும் அனைத்துமாக விளங்குவதும் அதுவே. ஏனென்றால் அதுதான் மனிதனின் அழியாத உணர்வுப் பொருள். உடம்பின் இயக்கங்களாக, மனதின் இயக்கங்களாக அந்த ஆன்மாவே திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக