சீர்காழி சட்டை நாதர் திருக்கோவில்

திருக்கயிலாயத்தைத் தனது சிறப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் குரு மூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும், லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோவில் கொண்டருளியும், சங்கம மூர்த்தமாக பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தும் வருகிறார்.இம்மூன்று மூர்த்தமாக தனித்தனியே பல தலங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், இத்தலத்தில் மூன்று மூர்த்தங்களும் ஒருங்கே விளங்க எழுந்தருளியுள்ளார்.
லிங்க மூர்த்தம் - இத்தலத்தில் மூலவராக விளங்கும் பிரம்மபுரீசுவரரே லிங்க மூர்த்தம். இறைவி பெயர் திருநிலை நாயகி. அம்மையின் ஆலயம் தனியே உள்ளது.
குரு மூர்த்தம் - இங்கு மலை மீது எழுந்தருளியிருக்கும் தோணியப்பரே குருமூர்த்தம். சம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு இவரே. அம்மையின் பெயர் பெரியநாயகி.
சங்கம மூர்த்தம் - இம் மூர்த்தம் சிவ மூர்த்த தலங்களுள் ஒன்றான பைரவ மூர்த்தம். இந்த ஆலயத்தில் பைரவர் எட்டு வடிவங்களில் தோன்றி, சுதந்திர பைரவர், சுயேச்சை பைரவர், லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பிச்சையா பைரவர், நிர்மாண பைரவர், பீஷ்ண பைரவர் எனப் பெயர் பூண்டுள்ளார். இந்த அஷ்ட பைரவர்களும் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் உள்ளனர். இந்த ஆலயத்தில் அருள்மிகு சட்டைநாத சுவாமியே பிரதானம். அவரது பெயரிலேயே இந்தக் கோயில் விளங்குகிறது.கீழே கோவில் கொண்டிருப்பவர் பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீசுவரர், இடையில் நடுத்தளத்தில் உள்ளவர் தோணியப்பர். மேலே, இரண்டாம் தளத்தில் உள்ளவரே சட்டைநாதர்.வாமன அவதாரகுள்ள வடிவில் இருந்த விஷ்ணு மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்டார். மகாபலியும் அவ்வாறே தருவதாக வாக்களித்தார். உடனே விஷ்ணு ஓங்கிய நெடிய அவதாரம் எடுத்தார். முதல் அடியாக மண்ணுலகையும், இரண்டாவது அடியாக விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது மகாபலியின் தலைமீது காலை வைத்து அழுத்தி, அவனைப் பாதாள உலகிற்குச் செலுத்தினார்.
இதன்பின் விஷ்ணுவுக்குக் கர்வம் தலைக்கேறியது. தானே உயர்ந்தவன் என்ற மமதை ஏற்பட்டது. தேவர்கள் அவரின் கர்வத்தை அடக்கச் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் வடுகநாதர்பைரவர் உருவெடுத்து விஷ்ணுவை மார்பில் அடித்து வீழ்த்தினர்.விஷ்ணு இறந்ததும் லட்சுமி சிவபெருமானிடம் ஓடோடிச் சென்றாள். தனக்கு மாங்கல்யப் பிச்சை தரும்படி கதறினாள். சிவபெருமான் விஷ்ணுவுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, அவரை உயிர் பெற்று எழச் செய்தார்.விஷ்ணு, சிவபெருமானிடம் தன் எலும்பையும் தோலையும், அணிந்து கொள்ள வேண்டுமென வேண்ட, இறைவனும் அவருடைய எலும்பை கதையாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து சட்டை நாதர் [பைரவர் ]ஆனார்.பெண்கள் தலையில் இருக்கும் பூவைக் கையில் எடுத்துக் கொண்டும், ஆண்கள் மேலே சட்டை இல்லாமலும்தான் சட்டைநாதரைத் தரிசிக்க வேண்டும். வெளியே வந்தபின் பூவை மறுபடியும் தலையில் வைத்துக் கொள்ளலாம் என்பது இங்கு பழக்கமாக இருந்து வருகிறது.இரண்டு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் ஐந்தடி உயரத்தில் சட்டை நாதர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.வெள்ளி தோறும் சட்டை நாதர் திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. நெய் வடையும் பாயசமும் இவரது பிரசாதங்கள்.சட்டை நாதரைத் தரிசித்தால் வாழ்வில் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக