துறவி ஒருவர் காட்டில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.
அந்தப் பக்கமாகச் சென்ற சில இளைஞர்கள் அவரை நெருங்கினார்கள். ‘‘உன்னைமாதிரி எத்தனை போலிச் சாமியாரைப் பார்த்திருப்போம், இனிமேலும் எங்களை ஏமாத்தமுடியாது!’ என்று அவர்கள் எவ்வளவுதான் அவரை அவமானப்படுத்திப் பேசியபோதும் அவர் வாய் திறக்கவில்லை. அமைதியாகத் தியானத்தைத் தொடர்ந்தார்.
திடீரென்று வானில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. ‘நான்தான் கடவுள் பேசுகிறேன், என்னுடைய பக்தராகிய உன்னைக் கேலி செய்யும் இந்த அற்பப் பதர்களை இந்த நிமிடமே அழித்து ஒழித்துவிடட்டுமா? ஒரு வார்த்தை சொல், செய்துவிடுகிறேன்!’ என்று கூறியது.
இதைக் கேட்ட அந்த இளைஞர்கள் பயந்து நடுங்கினார்கள். துறவியின் காலில் விழுந்து ‘ஐயா, எங்களைக் கொன்றுவிடாதீர்கள்’ என்று கெஞ்சினார்கள்.
இப்போது அந்தத் துறவி வாய் திறந்தார். ‘பயப்படாதீர்கள். பேசியது கடவுள் இல்லை!’
‘என்னது? பேசியது கடவுள் இல்லையா? எப்படிச் சொல்கிறீர்கள்?’
’ஒருவேளை பேசியவர் கடவுளாக இருந்தால் அவர் உங்களுடைய மனத்தை மாற்றதான் முயற்சி செய்திருப்பாரேதவிர கொல்ல வேண்டும் என்று எண்ணியிருக்கமாட்டார்’ என்றார் துறவி.
கடவுளின் குரலையும் மற்ற குரல்களையும் பிரித்து அறிவதுதான் தியானத்தின் முக்கியமான உச்ச நிலை. அதை நோக்கிப் பயணம் செய்யுங்கள். தானாக அமைதியடைந்து உண்மை உணர்வீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக