இறைவனிடமிருந்து பிரிந்த ஒரு ஆத்மா எடுத்த பல்வேறு பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கின் ஒட்டுமொத்த தன்மைக்கேற்ப, இந்த ஜன்மத்தில் "அது" (ஆத்மா) அனுபவிக்கவேண்டிய இன்ப துன்ப அனுபவங்கள் கணக்கிடப்பட்டு, அதற்குண்டான ஒரு கிரக அமைப்பில் அந்த ஆத்மா இந்த ஜன்மம் எடுக்கிறது. தாய் தந்தை, உடலமைப்பு, குணம்,ஆரோக்கியம், செல்வநிலை,கல்வி,ஆன்மிக தெளிவு,இல்லறம்,சந்ததி, சூழ்நிலை போன்ற அனைத்தும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு, அந்தந்த காலகட்டங்களில் நுகரவேண்டிய அனுபவங்கள் "கிரகங்கள்" மூலமாக நிகழ்த்தப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தைக்கொண்டும், நமக்கேற்பட்டுள்ள அனுபவங்களைகொண்டும் நாம் ஓரளவு நம் வாழ்க்கையின் ஓட்டத்தை புரிந்துகொண்டு, மனதை திடபடுத்தி, இதைத்தாண்டி இந்த பிறவியில் நாம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்-ஆசைப்படவேண்டாம்-என்று உணர்ந்து, மன நிம்மதி எதில் கிடைக்கிறதோ அதில் மனதை ஈடுபடுத்தி இந்த பிறவியை கழிக்கவேண்டியதுதான்.(கடவுளிடம் சரணாகதி தவிர வேறு எதிலும் இல்லை).
நவகிரகங்கள் என்பவை நேர்மையான,கையூட்டு பெறாத அதிகாரிகள். பாரபட்சமின்றி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் இறை அம்சங்கள். மனிதனை துன்பப்படுத்துவது அவர்களின் நோக்கமல்ல,விருப்பமுமல்ல. இறைவனுக்கோ, நவகிரகங்களுக்கோ பூஜை, அபிஷேகம்,யாகம்,பரிகாரம் செய்வதால் மட்டும் அவர்கள் மகிழ்ந்து நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்றி துன்பங்களை நீக்கி உடனடியாக இன்பநிலையை தந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது நமது அறிவீனம். தன்னை புகழ்பவனுக்கு வாரிக்கொடுத்தால் பின் மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன வித்யாசம்? ஜனனகால ஜாதகத்தை ஆராய்ந்து,ஆராய்ந்து பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
அப்படியென்றால் பூஜை, பிராத்தனைகள் அவசியமில்லையா?
நம் மனதிற்கு பிடித்த, நாம் எதிர்பார்த்திருந்த வண்ணம் சம்பவங்கள் நடந்தால் சந்தோஷம் என்றும், மாறாக நடந்தால் துக்கம் என்றும் மனிதன் நினைக்கிறான். இரண்டுமே நிகழ்வுகள் தான். அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை தான் சந்தோஷம் அல்லது துக்கம். சந்தோஷத்தில் துள்ளி குதிக்காமலும் துக்கத்தில் துவண்டு போகாமலும் இருக்கின்ற மன நிலையை பெற உதவுவதுதான் பிராத்தனை,பூஜை. துன்பம் என்று நாம் நினைக்கும் அனுபவம் இல்லாமல் போகிறதோ இல்லையோ - குறைகிறதோ இல்லையோ - பிராத்தனை,பூஜை இவற்றின் பலன், அப்படிப்பட்ட அனுபவங்களை ஏற்றுக்கொள்ளும்- தாங்கிக்கொள்ளும் மன உறுதியை - உடல் வலிமையை கட்டாயம் தந்துவிடும்.
நம் வாழ்க்கையின் போக்கு புரிந்துவிட்டதா?
இந்த ஜன்மாவில் இவ்வளவுதான் என்ற தெளிவு வந்துவிட்டதா?
இனி ஒரு பிறவி இல்லாத நிலை வாய்க்குமா? அல்லது மீண்டும் ஒரு பிறவியா?
அது தெரியாத நிலையில், அடுத்த பிறவியிலாவது மன நிம்மதியுடன் உலக சுகங்களுடன் வாழ விரும்பினால்.....நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று தான்.
நமக்கு மட்டுமல்ல, நம் சந்ததியினரும் நிம்மதியாக வாழ நாம் செய்யவேண்டியது....
தர்மம் தர்மம் தர்மம் ஒன்றுமட்டும்தான்.
இளைய தலைமுறையினருக்கு-நம் சந்ததியினருக்கு இப்போது இது புரியாது.
எனவே அவர்கள் விரும்பினாலும் விரும்ப விட்டாலும் நாம் செய்யக்கூடியது தர்மோபதேசம் மட்டுமே. இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவர்களுக்கும் இது புரியவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக